மௌனமான நேரம்

 

Saturday 6 February 2010

குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!

Posted by மௌனமான நேரம் | Saturday 6 February 2010 | Category: |
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தினமலர்!
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.