Thursday, 10 December 2009
விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?
Posted by மௌனமான நேரம் | Thursday, 10 December 2009 | Category:
செய்தி
|
விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசு தடுக்ககோரி பச்சப்பன் பச்சோ அந்தோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை (09.12.2009) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதனால், நீதிபதிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் இது குறித்து கூறியதாவது, உலகின் புராதன தொழிலான விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினம் என்று சொல்கிறீர்கள். உங்களால் விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் நீங்கள் (மத்திய அரசு) சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது? அப்படி சட்டப்பூர்வமாக ஆக்கினால், அந்த தொழிலை உங்களால் கண்காணிக்க இயலும். அதில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வளிக்க முடியும். மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் தர இயலும்.
பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதை தடுக்க அதை சட்டப்பூர்வமாக ஆக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தண்டனை அளிப்பதன் மூலம் உலகில் எங்குமே விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை.
ஏதாவது ஒரு வகையில் இந்த உலகில் விபசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எங்குமே சட்டப்பூர்வமாக தடுக்கமுடியவில்லை. எனவே, நீங்கள் ஏன் அதை சட்டப்பூர்வமாக ஆக்க கூடாது?... என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், நீதிபதிகள் இருவரும் கூறுகையில், "நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்'' என்று தெரிவித்தனர்.
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: