மௌனமான நேரம்

 

Tuesday, 30 June 2009

முத்தம்...

Posted by மௌனமான நேரம் | Tuesday, 30 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்


எனக்கு கோவம் கோவமா வருது.. ஏன் அவ இப்படி பண்ணினா?


அவளுக்கு நல்லா தெரியும் என்னை பாக்கும்போதும் பிரியும் போதும் முத்தம் குடுக்காம இருந்தா நான் ரொம்ப வருத்த படுவேன் என்று. மறந்துட்டா... அதெப்படி மறக்கலாம்...


இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இன்னக்கி ஒரு நாள் தானே மறந்தா அப்படின்னு அறிவு சொனாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது.. எப்போவும் ட்ரொப் பண்ணும் போது எந்த இடமா இருந்தாலும் சரி.. எத்தனை பேர் இருந்தாலும் சரி... கட்டி பிடிச்சி முத்தம் குடுத்துட்டு தான் போவா.. ஒரு சில நேரம் எனக்கே 'என்ன இவ்ளோ முத்தமான்னு' தோணும்.. ஆனாலும் ரொம்ப பெருமையா இருக்கும்.


மனசு ஆறவே மாட்டேங்குது.. சாயங்காலம் பிக் பண்ணும்போது கவனிச்சிக்கறேன். இன்னக்கி சண்டை தான் போட போறேன்.


என்ன தான் ட்ரை பண்ணினாலும் வேலையில் மனசே ஒட்ட மாட்டேங்குது. மனசெல்லாம் 'அவ எப்படி மறக்கலாம்' னு மட்டும் தான் தோணிட்டு இருக்கு. எப்படியோ சாயங்காலம் பிக் பண்ணற நேரம் வரை கஷ்ட பட்டு நேரத்தை தள்ளிட்டேன்.


இப்போ அவள பிக் பண்ண போறேன்...


அவள் எனக்காக காத்திருக்கிறாள்.


நான் கொஞ்சம் கோவமாவே அவளை நோக்கி போனேன். அவ என்ன பாத்ததும் ஓடி வந்தாள்.


முன்னாடி இருந்தா கோவம் கொஞ்சம் கொறஞ்சிருக்கு தான். இருந்தாலும் கொஞ்சம் கோவம் இருக்கு.,


ஓடி வந்த அவ என்ன கட்டி புடிச்சி ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தம் கொடுத்தா.. 'மோர்னிங் மறந்துட்டேன் சாரி '.. என்றாள் என் ஐந்து வயது செல்ல மகள்...

Saturday, 27 June 2009

எனக்காக!

Posted by மௌனமான நேரம் | Saturday, 27 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

நான் நினைப்பதை நான் நினைக்குமுன்

நீ நினைத்துவிட்டாய்... எனக்காக!

நான் ரசிப்பதை நான் ரசிக்குமுன்

நீ ரசித்து வைத்தாய்.. எனக்காக!

நான் கலங்குமுன் என் விழிகளில்

நீ நீர் துடைத்தாய்... எனக்காக!

நான் அழுகையில் உன் மடியினில்

நீ சேர்த்தணைத்தாய் ....எனக்காக!

நான் உறங்கையில் என் கனவினில்

நீ இடம் பிடித்தாய்... எனக்காக!

நான் சிரிக்கையில் என் சிரிப்புக்கு

நீ விதை விதைத்தாய் ... எனக்காக!

நான் நினைக்கையில் என் கனவுக்கு

நீ உரு கொடுத்தாய்... எனக்காக!

நான் மறக்கையில் என் உணர்வுகள்

நீ புரிந்திருந்தாய் ...எனக்காக!

நான் பேசையில் என் பேசினில்

நீ மயங்கி நின்றாய்.. எனக்காக!

என் உணர்வினில் என் உயிரினில்

நீ கலந்திருந்தாய்... எனக்காக!

என் மூச்சிருக்கும் வரை நேசித்து

வாழ்ந்திருப்பேன் நான்... உனக்காக!

தாய் அன்பு

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
அழகான குடும்பம்.... கண்மணி போல ஒரே ஒரு அழகான பெண் குழந்தை.. அழகான பெயர் கூட ... மாலா...


பெற்றோர் என்றால் மாலா - க்கு கொள்ளை பிரியம்... ஆனால் அவள் பெற்றோர்க்கோ அதை விட....


அந்த குழந்தைக்கு பாசத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றோர், அருமையான இன்ஜினியரிங் பட்டத்தையும் வாங்கி குடுத்தாங்க.

கல்லூரி நாட்களில் அப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அவளுக்கு...

இப்படியாக இருக்கும் போது, வேலை தேடி பட்டணம் சென்றாள் மாலா.. சின்னதாய் ஒரு வேலையும் வாங்கினாள்.

நாட்கள் கடந்தன........


ஒரு நாள், துடியா துடித்து போனாள் அந்த செய்தி கேட்டு ... எதோ எல்லாம் இழந்ததை போல் நினைத்தாள்...


விதவை தாயை தன்னுடன் வந்து இருக்கும் படி அழைத்தாள் மாலா...


அப்போது தான் மாலா- க்கு பெரிய வேலையும் தேடி வந்தது.. மாதம் 25,000 ரூபாய் ஊதியம்... மாதம் தோறும் ஒரு காரணம் சொல்லி, ஊதியம் முழுவதும் கிடைக்க வில்லை என்பாள் மாலா...

மாலா- க்கு வரன் தேடி அலைந்தாள் அந்த அருமை விதவை தாய்... வந்த எல்லாத்தையும், எதோ காரணம் சொல்லி தட்டி கழித்தாள் மாலா. பல காரணம் சொல்லி அந்த தாய் மனதை புண் படுத்தினாள் மாலா.

முதுமை காலத்தை நிம்மதியாக கடத்த விரும்பிய தாயை, தன்னுடன் அழைக்க மறுத்தாள் மாலா. காரணம் தெரியாமல் தவித்தாள், காரணம் தெரிய துடித்தாள் அந்த தாய்.

தன் வீட்டு போன் ஒலிக்க, ஓடி போய் கேட்ட சேதி , இடி போல இருக்க, உடனே பட்டணம் கிளம்பினாள் அந்த தாய்.

பதட்டத்துடன் வீட்டுக்குள் போன தாய், மண கோலத்துல மாலா... தன் ஆசை காதலனுடன்....

தரைல விழுந்த தாய், இப்போ தன் அருமை கணவனுடன் விண்ணுலகில்.....

Wednesday, 24 June 2009

மஞ்ச பை - கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 24 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
பக்கத்து சீட் காலியாக இருந்தது. 'நல்ல டீசென்டான ஆளா வந்தா சரி. இந்த தடவை flight லேயும் டிக்கெட் கிடைக்கவில்லை. முதல் வகுப்பு ஏசி யிலும் கிடைக்கவில்லை. சரி சாதா ஸ்லீப்பர் லேயாவது கிடைதிருந்தால் பரவாயில்லை என்றால் , அதுவும் கிடைக்கவில்லை. இந்த பஸ் லே தான் கிடைத்தது. கடைசி நேரத்தில் டிக்கெட் வேண்டுமென்றால் என்ன செய்வது.

இன் பண்ணின டி-ஷர்ட் உம சூட்கேஸுமாக ஒரு இளைஞன் வந்தான். ம்ம்.. இவன் கூட பரவாயில்லை.

அவன் என்னை தாண்டி அடுத்த சீட்டுக்கு போய்விட்டான்.

அடுத்தது ஒரு நாகரீக யுவதி ஜீன்ஸ் இல் வந்தாள். ம்ம்.. இவள் கூட பரவாயில்லை.

அவளும் அடுத்த சீட்டில் போய் அமர்ந்தாள்.

அடுத்தது, அழுக்கு வேஷ்டியும், மஞ்சள் பையும் வைத்திருந்த ஒரு நடுத்தர வயதுகாரர்.

அட ஆண்டவா இந்த ஆளா.... வேண்டாமே...

என் கெட்ட நேரம் அந்த ஆள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இது போதாதென்று என்னை பார்த்து புன்னகை வேறு.

அங்க போய் சேருற வரை இத தாங்கணுமா. கடவுளே....

அந்த ஆள் மேல் படாமல் கொஞ்சம் விலகி உட்கார்ந்தேன்.

போய் சேர்ந்த உடனே குளிக்கணும்...

'உங்க டிக்கெட் காட்டுங்க'. சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். கண்டக்டர். பாகெட்டில் கை விட்டு டிக்கெட் எடுக்க நினைக்கும்போது தான்... 'ஷிட்.. டேபிள் லே இருந்து டிக்கெட் எடுத்து வைக்கனும்னு நினச்சேன் மறந்துட்டேனே.... ' தட்ஸ் ஆல்ரைட் ... பே பண்ணிடலாம்.

கண்டக்டர்.. நான் டிக்கெட் வீட்டுலே மறந்து விட்டுட்டேன்... எவ்வளவு பே பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடறேன்...

450 ரூபாய் ங்க...

ஆங்.. என் கெட்ட நேரம்... காஷ் இல்லையே..

கண்டக்டர்.. என்கிட்டே கிரெடிட் கார்டு தான் இருக்கு.......

ஒரு நிமிடம் ஒட்டு மொத உலகமும் என் தலையில் சுற்றுவது போல இருந்தது... இப்படி பணம் இல்லாமல் இந்த மாதிரி ஒரு இடத்தில் இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததே இல்லை. ஐந்நூறு ரூபாயை நான் பெரிதாக நினைத்து கூடஇல்லைநிமிடம் வரை .

பணம் இருந்தா குடுங்க. இல்லன்னா இறங்கிடுங்க. பஸ் கிளம்பற நேரமாச்சி.

என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு முக்கியமான விஷயமாக அவசரமாக போகிறேன். இந்த பஸ் இல் போனால் தான் போய் சேர சரியாக இருக்கும். அடுத்த பஸ் இல் போனால் மிகவும் லேட் ஆகி விடும்.

அந்த தி-ஷர்ட் இளைஞன் 'சீக்கிரம் முடிவு பண்ணுங்க . எங்களுக்கு லேட் ஆகுது.'

எல்லோரும் 'ஆள் பாக்க டீசென்ட் ஏ இருக்க மாதிரி இருக்கு.' என்று முனுமுனுப்பது கேட்டது.

கண்டக்டர்.. இதுலே ஐந்நூறு ரூபாய் இருக்கு.. டிக்கெட் குடுத்துட்டு மீதி குடுங்க ....சொன்னது மஞ்சள் பைகாரர்.

சார்.. அங்க போனதும் atm லே வித்ட்ராவ் பண்ணி தந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ்.

இதுக்கு என்னங்க தேங்க்ஸ்... மனுஷனுக்கு மனுஷன் இது கூட பண்ணலேன்னா எப்படி?

இப்போது விலகி உட்காரவில்லை நான்.

Monday, 22 June 2009

வலி என்னும் போதி மரம்...

Posted by மௌனமான நேரம் | Monday, 22 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்



வலி... நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு வலியை அனுபவித்திருப்போம்.. அக வலி... புற வலி.. எதாவது ஒன்று.

தாங்க முடியாத வலி! மரண வலி! நம்மில் பலர் இதை கூட அனுபவித்திருப்போம். அப்பப்பா... அந்த நேரத்தில் அது வரை பெரிதாக , முக்கியமாக பட்ட எல்லாமே மறந்து விடுகிறது.. அந்த நிமிட தேவை 'நிவாரணம்'. இதை தவிர வேறொன்றுமில்லை. அந்தஸ்து.. பணம்.. புகழ்.. பதவி.. எதுவுமே ஞாபகம் வருவதில்லை. வலி என்ற ஒன்றை தவிர வேறு எல்லாமே சூன்யமாகி விடுகிறது.

'தாங்க முடியாத வயிறு வலியால் தற்கொலை'. என்றெல்லாம் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் தோன்றும். இதை கூட தாங்க முடியாதா என்று. இப்போது தோன்றுகிறது விலை மதிக்க முடியாத உயிரை விட தயாராகி இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு துடித்திருபான். எனக்கு தற்கொலையில் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் அந்த செய்திகளை படிக்கும்போது வந்த கோபம் இப்பொழுது இல்லை. இப்பொழுது புரிகிறது. தெளிவாக புரிகிறது.

காதலுக்காக, உணர்வுகளுக்காக சாபவர்களை நினைத்தாலே கோபம் வருகிறது. எல்லோரும் வாதிடலாம் உணர்வு பூர்வமான தோல்விகள் உடல் சார்ந்த வலிகளை விட பெரிதென்று.. ஆனால் அப்படி சொல்பவர்கள் நிச்சயம் இந்த வலியை அனுபவிக்காதவர்கள் தான். உன் கையில் இருக்கும், உன் கைகெட்டிய தூரத்தில் இருக்கும், உன் பிடியில் இருக்கும் உன் உணர்வுகளை... உன்னால் மாற்றவோ , வளர்க்கவோ, அழிக்கவோ முடிந்த உன் உணர்வுகளை... உன்னால் வெற்றியோ தோல்வியோ பெற வைக்க முடிந்த உன் உணர்வுகளை... தோற்று விட்டது என்று அழுது புரண்டு உயிரை விட்டால்... கொஞ்சம் கூட நம் கட்டுபாட்டில் இல்லாத ஆரோக்கிய தோல்வியை, உடல் வலியை எப்படி தாங்க முடியும்.

உலகில் என்னை விட , உன்னை விட கஷ்ட்படுபவர்கள் பலர் இருகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. யாருடைய குற்றமுமே இல்லாமல் கஷ்டபடுகிறவர்கள் ஒருபுறம் இருக்க, அடிதடி, வெட்டு குத்து, கொலை, போர், வறுமை, வறட்சி, கொடுமை, இன்னும் எவ்வளவோ விஷயங்களால் மனிதனுக்கு மனிதனே தரும் வேதனைகள் மறுபுறம்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்காக நாம் வருத்தப்பட்டு பயனில்லை. ஆனால் மேற்கூறிய விஷயங்கள் எல்லாமே நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

சினிமாவில் சித்ரவதை தாங்காமல் நண்பனை, குடும்பத்தை, தேசத்தை காட்டி கொடுப்பவர்களை பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் எப்படி துரோகம் செய்யலாம் என்று எரிச்சல் பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தோன்றுகிறது அவன் எவ்வளவு கஷ்டபட்டிருந்தால் தன்னை மீறி துரோகம் செய்திருப்பான். லஞ்சம் வாங்கி துரோகம் செய்த எத்தனையோ பேர் இருக்க இவர்கள் மேல ஏன் கோபப்பட வேண்டும்.

இப்போது கூட மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரிவுகளின் பெயரால், ஆசையினால், அகம்பாவத்தினால், பொறாமையினால் எவ்வளவு கொடுமைகள். ஒவ்வொரு மனிதனும், அடுத்தவனை காயப்படுத்தும் முன்பு, என்னால் இந்த காயத்தை தாங்க முடியுமா என்று ஒரு வினாடி எண்ணினாலே போதும், கண்டிப்பாக அவனால் யாரையுமே காயப்படுத்த முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மனிதர்கள் இதை நினைப்பார்களா?

கடவுளே! உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழும் நாள் வரை ஆரோக்கியம் கொடு, சாகும் போதும் அமைதியை கொடு. ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு சாவதற்கு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது சரிதான். ஆனால், யாருக்கும் தீங்கு நினைக்காத குழந்தைகள் போன்றோருகாவது?

வலிதான் போதி மரம்... எல்லா ஞானமும் வர வைக்கும் என்றால்.... எங்களுக்கு புரிந்து விட்டது ..ஆனால் அந்த போதி மரத்திற்கு மட்டும் திருப்பி அனுப்பி விடாதே.

Friday, 19 June 2009

தாய்மார்களே தந்தைமார்களே!

Posted by மௌனமான நேரம் | Friday, 19 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தாய் தந்தைகளாகிய என் பெண் ,ஆண் நண்பர்கள் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

குழந்தை மேல் பாச மழை பொழிந்து, பொத்தி பொத்தி, கொஞ்சி வளர்க்கும் தாய்மார்கள் கூட தான் தன் குழந்தையை இன்னும் ந்ன்றாக பேண வேண்டுமோ, வளர்க்க வேண்டுமோ, நான் சரியாக வளர்பதில்லயோ, வேறு ஒருவராக இருந்தால் நன்றாக பார்ப்பார்களோ என்றெல்லாம் புலம்புவார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. தான் எது செய்தாலும் போதவில்லை என்றே அவர்களுக்கு தோன்றுகிறது.

காலை எழுந்து குழந்தையை கவனித்து, வீட்டு வேலை செய்து, கணவரை வழியனுப்பி..... அப்பப்பா மூச்சி விடாமல் உழன்று பின் தன் அலுவலகம் சென்று அங்கும் வேலை செய்து...ஏசும் பேசும் வாங்கி... பின் வீட்டுக்கு வந்து மீண்டும் குழந்தை , கணவன், வீட்டு வேலை . இதற்கிடையில் குழந்தைக்கு அது தேவை இது தேவை என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். இவ்வளவு செய்தாலும். இதெல்லாம் பத்தாதே .. நான் செய்யறது போதாதே ..என்று புலம்பல் வேறு..

ஆனால் எந்த தந்தையும் இப்படி புலம்பி நான் கேட்டதில்லை. குழந்தைக்காக 5 நிமிடம் செலவு செய்தாலும், தான் தான் உலகிலேயே சிறந்த தந்தை என்று அவர்கள் நினைப்பு. ஏன் இப்படி?

சில நேரங்களில் கோபம் வருவதாலேயோ, கோபத்தில் கத்துவதாலேயோ, கொஞ்சம் களைப்பாக இருப்பதாலேயோ, சிற்சில விஷயங்கள் கவனிக்க முடியாததாலேயோ நீங்கள் குறைந்தவர்கள் ஆகிவிட மாட்டீர்கள். இந்த தடைகளை பார்க்காமல், கடக்காமல் வந்தால் நீங்களும் நானும் மனிதர்களே அல்ல... தெய்வங்களாகி விடுவோம். இவை எல்லாம் தடைகள் தானே தவிர தவறுகள் அல்ல.

இன்னும் இன்னும் செய்யணும் என்று நினைக்கும் தாய்மார்களே... இதுவே போதும் என்று நினைக்கும் தந்தை மார்களே... உங்களை விட உங்கள் குழந்தையை வேறு யாருமே நன்றாக பார்த்து கொள்ள முடியாது. உங்களை விட சிறந்த தாய் தந்தை உலகில் வேறு கிடையாது....

அதனால், உங்களை நீங்களே குறைத்து மதிபிடுவதை விடுங்கள்...

'You are the Best! You know it! Just accept it!'

.

மலரும் நினைவுகள் !

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

நமக்கு தான் இப்பவும் சரி அப்பவும் சரி எக்ஸாம் நா நாலு நாளிக்கு முன்னாலேயே உதறல் எடுக்க ஆரம்பிச்சிடும்.. என்ன தான் விழுந்து புரண்டு படிச்சாலும் எக்ஸ்ம் ஹால் உள்ள நுழைய போகும் போது தான் எதுவுமே படிக்காத மாதிரி ஒரு பயம். அப்படியே அடிச்சி பிடிச்சி படிச்சா கொஞ்சூண்டும் மறந்து போன மாதிரி வேற இருக்கும்.

காலையிலே எக்ஸாம் எழுத போற முன்னாடி எங்க கிளாஸ்-எ எறும்பு கூட்டம் மாதிரி ஒரே சுருசுருசுருசுருசுருப்பு..

கணபதி எக்ஸாம் லே நல்ல மார்க் வாங்கினா விநாயகருக்கு தேங்காய் உடைக்கறதா வேண்டிக்குவான். நம்ம காசுலேயா வாங்க போறோம்.. அப்பாக்கள் பாவம் நமக்கு ஸ்கூல் பீஸ், எக்ஸாம் பீஸ் எல்லாம் கட்டி தேங்காய்க்கும் வேற sponsor பண்ணனும்..

அதே விநாயகருக்கு நூறு தோப்புகரணம் போடறதா வேண்டிக்கறது விஜயா.. ஆனா அவ ஒரு தடவை கூட குடுத்த வாக்க காப்பதினாளான்னு தெரியலே... நான் கேட்டதும் இல்ல அவ தோப்பு கரணத்தே எண்ணினதும் இல்ல.. ஒரு வேளை 'நான் ஒரு தடவை தோப்பு காரணம் போட்டா நூறு தடவை போட்ட மாதிரின்னு' அவ விநாயகர்கிட்ட சொல்லிட்டாளோ என்னவோ.. நல்ல வேளை இது வரைக்கும் அவகிட்ட விநாயகர் 'நான் ஒரு மார்க் குடுத்தா நூறு மார்க் குடுத்த மாதிரின்னு சொல்லவே இல்லை.' அவ எப்போவுமே நல்ல மார்க் வாங்கிடுவா.

ரோஸ் . அவள் பரீட்சை எழுதும் முன்னால் எங்கள் கான்வென்ட் அருகில் உள்ள சர்ச் க்கு போய் இயேசு வுக்கு லெட்டர் எழுதி உண்டியலில் போட்டுட்டு வருவா. அவள் அதோடு பலரோட லெட்டர் உம கூட சேர்த்து போஸ்ட் செய்ததுண்டு . என்னிடம் கூட லெட்டர் இருக்கான்னு கேட்பாள். இதுலே நிறைய பேருக்கு டௌட் கூட வரும். மாதா முன்னாடி இருக்க உண்டியல் லே போடணும்னா இல்ல இயேசு முன்னாடி இருக்க உண்டியல்லே போடனுமான்னு..

சாய் தாயத்து கட்டிக்குவான் எக்ஸாம் ஆரம்பிக்கற முதல் நாள். தன் மேல் இல்லாத நம்பிக்கை தாயத்து மேல்.

இதுலே மொட்டை அடிக்கறேன். நடந்தே கோவிலுக்கு வர்றேன்... இப்படி எல்லாம் கூட நிறைய வேண்டுதல் உண்டு.

முதல் எக்ஸாம் நல்லா எழுதின அன்னக்கி போட்டிருக்க டிரஸ், பேனா, எல்லாம் கடைசி எக்ஸாம் வரை மாத்தாத காலம் கூட உண்டு ..அது ராசியான டிரஸ், பேனான்னு . ஒரு வேளை அம்மா ரொம்ப வற்புறுத்தி பிடிக்காத டிரஸ் போட்டு அன்னக்கி எக்ஸாம் நல்ல எழுதிட்டா அத தான் கடைசி நாள் வரை அழுதிட்டே போட வேண்டி வேற வரும்..

அதென்னவோ.. என்ன தான் படிச்சாலும் இப்படி சின்ன சின்ன விஷயத்துலே ஒரு நம்பிக்கை... இப்போ நினைச்சா காமெடி யா இருந்தாலும்.. அப்போ அத அவ்ளோ சிரத்தையா நம்பி பத்தாததுக்கு பக்கத்துலே இருக்கவங்களுக்கு வேற lecture அடிச்சத நினச்ச சிரிப்பு தான் வருது....

உண்மைய சொல்லனும்னா இப்போ கூட நாலு கழுதை வயசான பிறகும் (இது சும்மா எழுத்துக்கு தான் ;) அந்த நம்பிக்கைகள் கொஞ்சம் எட்டி பாக்கத்தான் செய்யுது.. என்ன அந்த வயசுலே கள்ளம் கபடம் இல்லாம எல்லார்கிட்டயும் சொன்னோம்.. இப்போ சொன்னா சிரிப்பாய்ங்கன்னு அடக்கி வாசிக்கரோம்லே...


Thursday, 18 June 2009

காதல் கவிஞன்! - கதை

Posted by மௌனமான நேரம் | Thursday, 18 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

'இன்னக்கி கார்தி்க்கோட 'காதல்' கவிதைதொகுப்பு வெளி வருது . ஆபீஸ் போற வழியில் வாங்கிட்டு போகணும்.' இது வரை அவள் அவன் கவிதை , கதை எல்லாவற்றிலும் முதல் பிரதி வாங்கிவிடுவாள்.


கார்த்திக் ஒரு எழுத்தாளர். குறிப்பாக பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் அவரது கதைகள். நம் தமிழ் சினிமா போலல்லாது கார்த்திக் கதைகளில் எப்போதுமே கதைக்கு நாயகி தன் முன்னிடம். ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் இவ்வளவு ஆளாக புரிந்து எழுத முடியுமா என்று கவிதா எப்பொழுதுமே ஆச்சரியபடுவாள். அதுவும் அவன் கவிதைகள் காதலில் நனைந்து, ஆசை ஒழுகி கொண்டே இருக்கும். இப்படி ஒருவனை கணவனாக அடைபவள் கொடுத்து வைத்தவள் என நினைப்பாள். அப்படியே அது தானாக இருக்க கூடாதா என்று கூட ஒரு ஆசை உண்டு.


'கவிதா!' அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டு கனவு கலைந்தாள்.


'மதியம் சீக்கிரம் வந்துடு. மாப்பிளை வீட்டுலே இருந்து வராங்க.'


'இப்போ என்னம்மா எனக்கு கல்யாணத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் நிம்மதியா சம்பாதிக்கரேனே!'


'ஒன்னும் பேசாதே . சீக்கிரம் வா. மாப்பிள்ளை பிடிக்கலேன்னா அப்பறம் பாக்கலாம்.'


கவிதா முனுமுனுத்து கொண்டே கிளம்பினாள்.


மதியம் கையில் 'காதல்' உடன் வீட்டு உள்ளே நுழைந்தாள். ஒரு நிமிடம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தன. இது கனவா என்ன? கிள்ளி பார்த்து கொண்டாள்.


அவள் வரும் முன்னே மாப்பிள்ளை வீட்டார வந்து விட்டார்கள். அங்கு மாப்பிளையாய் அமர்ந்திருந்தது சாட்சாத் கார்த்திக் தான். அட!கடவுள் application குடுக்கும் முன்னாலே offer letter குடுதுட்டரே. கண் மூடி திறக்கும் முன்னே சடங்குகள் சம்ப்ரதாயங்கள் முடிந்து கல்யாணம் நடந்து, இப்போது ஒரு வருடம் ஆகி விட்டது.


ஆனால் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள். உருகி உருகி காதல் கவிதை எழுதும் கார்த்திக் அவளை அவள் நினைத்த மாதிரி உருகி உருகி காதலிக்க எல்லாம் இல்லை. 'கவிதா என்றொரு கவிதை' என்று பாடுவான் என அவள் நினைக்கும் போதெல்லாம் அவன் சொல்வது 'Be practial'.


இன்று அவள் முடிவு செய்து விட்டாள். இதை பற்றி பேசியே ஆக வேண்டும். சமயம் பார்த்து மெதுவாக, ' என்னங்க உங்க கதை கவிதை எல்லாம் எவ்ளவு ரொமான்டிக்- ஆ இருக்கு. பெண்கள் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சி எழுதறீங்க. ஆனா ரியல் லைப்ல ஏன் வேற மாதிரி இருக்கீங்க?'


கார்த்திக் புருவம் நெரித்து பார்த்தான். ' don't be silly! அது கதை- கவிதை. இது வாழ்கை. அது வேற இது வேற.'





Wednesday, 17 June 2009

பலருள் சிலர்...

Posted by மௌனமான நேரம் | Wednesday, 17 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

மூன்றுக்கு நான்கு வேளை

மூச்சு முட்ட சாப்பிட்டு

பட்டினி பற்றி பகிரங்கமாக

பிரசங்கம் பண்ணும் சிலர்....

அன்பென்றால் என்ன விலை

அரை கிலோ என்று கேட்டு

அண்டத்தில் அன்பில்லை என

ஆவேசப்படும் சிலர்...

என் வீட்டு நாய் குட்டிக்கு

எட்டு நாளாய் அஜீரணம் என்றுவிட்டு

எதிர் வீட்டு மழலை துளி பாலுக்கு அழுவதை

எட்டி நின்று பார்த்து மறக்கும் சிலர்...

அருகிலிருக்கும் மனதின் தேவை

அன்பென்று அறியாமல்
ஆசியா கண்டத்தின்

அமைதியை தேடும் சிலர்....

பல கோடி மாந்தருக்குள்

பல்கி பெருகிய இவர் போல்

வாழ்ந்திருந்த சுவடே இன்றி நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ??

Wednesday, 10 June 2009

மனம்! -கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 10 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்
தினேஷ்! சீக்கிரம் வாடா ஸ்கூல் க்கு லேட் ஆச்சி.

இருடா.. நீ ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கே ஓடிபோயிடுவே,, நான் யானை அசைஞ்சி தானே வரணும்! :)


தினேஷ்! homework பண்ணலியா. stand upon the bench!


சார் பெஞ்ச் லே நிக்கறது என்னகு ஒன்னும் problem இல்ல. ஆனா அப்பறம் பெஞ்ச் உடஞ்சிடிச்சின்னா என்ன ஒன்னும் கேக்க கூடாது! :)


டேய் தினேஷ்!நெக்ஸ்ட் வீக் உனக்கு பர்த்டே தானே டிரஸ் வாங்கிட்டியாடா.


உனக்கு டிரஸ் வாங்க எந்த கடைக்கு வேணும்னாலும் போகலாம். என்னக்கு வாங்கனும்ன நான் ஒரு கடையே வாங்கணுமே :)


தினேஷ்! இன்னும் 2 இட்லி சாப்டுடா. வளர்ற பையன் 1 இட்லி சாப்பிட்டா போதுமா. உனக்கு பிடிக்கும்னு தானே சாம்பாரும் தேங்காய் சட்னியும் வச்சேன்.


நீ வேறம்மா ஒன்னு சாப்பிட்டே இப்படி இருக்கேன்.. இன்னும் ரெண்டு சாப்பிட்டா நம்ம வீட்டு கதவ பெருசு தான் பண்ணனும்.


தினேஷ்! நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லார்கிட்டேயும் நீயே உன்ன குண்டு குண்டு ன்னு சொல்லி இன்சுல்ட் பண்ணிகறியே. நீ ஸ்மார்ட் அ அழகா தானே இருக்கே. உனக்கு என்ன கொறச்சல். சரியா சாப்பிட கூட மாட்டேங்கறே.


இல்லம்மா. வேற யாரவது நான் குண்டுன்னு சொல்லறதுக்குள்ள நானே சொல்லிகறேன். அப்போ என்னக்கு மன கஷ்டம் கொறயுமேன்னு தான்!


Tuesday, 9 June 2009

என் கேள்விக்கென்ன பதில்?

Posted by மௌனமான நேரம் | Tuesday, 9 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
எனக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் போது நிறையா சந்தேகம் வரும். அதுவும் geographhy லே ரொம்ப நிறையா வரும். அப்போ அப்போ teachers கூட திணருவதுண்டு. ஒரு டீச்சர் கிளாஸ் உள்ள நுழையும் போதே 'இன்னக்கி இந்த chapter கண்டிப்பா முடிக்கணும். No questions please' ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க. ஆனாலும் நமக்கு கேள்விகள் மட்டும் கண்ணு மண்ணு இல்லாம தோணிகிட்டே இருக்கும்.. இத்தனை வருசத்துக்கு அப்பறம் அதுலே பல கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கு . சிலதுக்கு இன்னும் கிடைக்கலே :(

அந்த லூசுத்தனமான கேள்விகளில் சில இதோ:-

1. உலகம் உருண்டை வடிவமானது. சரி. அப்போ உருண்டையின் மேலே இருப்பவர்கள் நேராக நிற்கும் பொது கீழே இருப்பவர்கள் தலை கீழாக நிற்க மாட்டார்கள? :( புவியீர்ப்பு விசையினால் தான்.

2. உலகில் எல்லா இடத்திலும் ஒரே நேரம் மழையும் வெயிலும் வருவதில்லை. அப்போ ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் இடது பக்கம் மழையும் வலது பக்கம் வெயிலும் இருக்குமா? :)

3.உலகம் சுற்றும்போது நில பரப்பும் நீர் பரப்பும் எப்படி இடம் மாறாமல் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது?

4. உலகில் சில நாடுகளில் , 'நீண்ட இரவு, நீண்ட பகல், குறுகிய இரவு, குறுகிய பகல்' இதெல்லாம் என்ன ?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்ன பாத்து பயப்பட மாட்டாங்களா என்ன :)