மௌனமான நேரம்

 

Wednesday, 26 August 2009

மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்!!!!!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 26 August 2009 | Category: |
நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.

நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே தெருவில் உருண்டு புரண்டு, ஒரே பாலர் பள்ளியில் சேர்ந்து, சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, சேர்ந்து சண்டை போட்டு, ஒரே மாங்காயை காக்கை கடி கடித்து, இப்படி சேர்ந்து சேர்ந்து வளர்ந்தோம். ஆனால் மேற்படிப்பு என்று வரும்போது நான் வக்கீல் ஆனேன். அவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆனார்கள். இதற்கிடையில், அவர்களுக்குள்ளே காதலும் வளர்ந்தது.

எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அவர்களை பார்த்து ஆச்சரியப்படாத, பொறாமைபடாத ஆளே கிடையாது. பெயரிலிருந்து செயல் வரை எல்லாவற்றிலுமே அப்படி ஒரு பொருத்தம். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்து கூட நாங்கள் பார்த்தது இல்லை. ரெண்டு பெரும் மாறி மாறி வினும்மா என்று கொஞ்சுவதை எல்லோரும் கேலி செய்தாலும் ரொம்ப ரசிப்போம் என்பது தான் உண்மை.

அவர்கள் பெற்றோருக்கும் இவர்கள் காதலில் எதிர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதி, மதம், அந்தஸ்து என்று எல்லாவற்றிலுமே ஒரே நிலையில் இருந்தது தான் காரணமோ என்னமோ தெரியவில்லை. எது எப்படியோ, ஆசைப்பட்டு காதலித்து , ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணமும் பண்ணி... ஹ்ம்ம்.. முன்னெல்லாம் ஒரே ஊரில் இருந்ததால் எப்போதும் சேர்ந்தே இருந்தோம். வேலை என்று வந்த பிறகு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டியது வந்தது. ஆனாலும், கண்டிப்பாக 2 நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம். ஆனால் அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு அது மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆகி இப்போ இன்னும் குறைந்து விட்டது.

அந்த வினோத் தான் இன்று என்னை பார்க்க வந்திருக்கிறான்.

'டேய்.. ரொம்ப நாள் ஆச்சி பாத்து.. போன் பண்ணனும்னு நினைக்கிறேன்,,, ஆனா பண்ண முடியறதில்லை.. ரொம்ப சந்தோஷம்டா ... '..

நானே பேசிகொண்டிருந்தேன்... இப்போதுதான் கவனித்தேன்.. அவன் முகம் வாடியிருப்பதை..

'ஏன்டா எதாவது பிரச்சனையா? வினு எங்கே? வரலியா? என்ன??' பதட்டம் தொற்றி கொண்டது.

'அவ வரமாட்டா!!'

' அவளுக்கு உடம்புக்கு எதாவது????'

'உடம்பெல்லாம் கொழுப்பு அதிகமானது தவிர நல்லா தான் இருக்கா ...'

'என்னடா இந்த வயசிலேயே cholestrol-எ . டாக்டர் கிட்ட போனீங்களா ?'

'ஏன்டா நீ வேற... கல்லு மாதிரி நல்லா தான் இருக்கா...'

'சண்டையா?

'ஒத்து வராதுடா.. அதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்'

'என்ன விளையாடரியா? '

'இல்லடா சீரியஸ் தான் பேசறேன். ஒத்து வராதுன்னு ஆயிடிச்சி. அதான் ரெண்டு பெரும் மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்னு...'

நானும் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட பிடி தளர்த்தவே இல்ல. நான் நொந்து போனது தான் மிச்சம். எவ்வளவு கேட்டும் 'ஒத்துவராது' ன்னு மட்டும் தான் சொல்றான். ஏன் ன்னு சொல்ல மாட்டேங்கறான்.

'சரி. நீ இப்போ கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்'.

'நான் நாளைக்கு லீவ் தான் 10 மணிக்கு வா, அப்போ தான் அவ இருக்க மாட்டா.'

தலையில் அடிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு. அவனை அனுப்பிட்டு நேரா கிளம்பி விநோதினியை பாக்க போனேன். ஒரு மணி நேர பயணம். ஆனால் போன் இல் பேசுவதை விட நேரில் பேசுவதுதான் நல்லது என்று தோணியது. எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் வினோதினி வேண்டா வெறுப்பாக பார்த்தாள்.

'எப்படி இருக்கே வினோதினி?'

'இருக்கேன்... '

'நேத்து வினோத் வீட்டுக்கு வந்திருந்தான்.'

'ம்ம்...'

'என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். '

விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிரச்சனை இதுதான். வேலைக்கு போகும் வரை இருவருக்கும் நிறைய நேரம் இருந்தது.. பேச, புரிந்து கொள்ள... இப்போது ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டதால் பேச கூட நேரமில்லை. சேர்ந்திருக்கும் கொஞ்ச நேரமும் சின்ன சின்ன பிரச்சனை.. அதை தீர்க்க நேரமில்லாமல் இப்போது பூதாகரமாக ஆகிவிட்டிருக்கிறது..அவளை சமாதான படுத்திவிட்டு கிளம்பினேன்..

அடுத்த நாள் நன்றாக யோசித்து வினோத்துக்கு போன் பண்ணினேன். ரொம்ப நேரம் பேசி கஷ்டப்பட்டு அவனை சம்மதிக்க வைத்தேன்.

நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கவேண்டும், அந்நேரம் எதாவது ஒரு காரியம் சேர்ந்தே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பள்ளி காலத்தில் எப்படி பேசினார்களோ அதை போல் பேசி கொள்ள வேண்டும். திருமணம் ஆனதை அடியோடு மறந்து விட வேண்டும்.

விநோதினிக்கும் போன் பண்ணி இதையே சொன்னேன். 'இதென்ன சிறுபிள்ளைத்தனம்' என்றாள். கடைசியில் ஒரு வழியாக சம்மதித்தாள். இது நடந்து ஒரு வாரமாக அவர்கள் இருவரும் என்னிடம் பேசவே இல்லை. நான் கூட என் master plan failure ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

அவர்களை பிரித்து வைக்க மனம் ஒப்பவில்லை. ஓடி போயிடலாம் போல இருக்கு. சரி எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியம்... ரெண்டு பேருமே வீட்டில் இருக்காங்க ... ஆண்டவனை வேண்டிகிட்டே உள்ளே போனேன். ரெண்டு பேர் முகத்தையும் பாத்து ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே. சரி அவங்களே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ் டா...'

ரெண்டு பேரும் சேர்ந்து தான் சொன்னாங்க.

'எங்களுக்குள்ள இருந்தது பிரச்சனை இல்லை ...மனதளவில் தூரம் தான் இருந்தது.. இப்போ ஒரு வாரமா எவ்வளவு வேலை இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்கிறோம்..சும்மா பேசிட்டு.... சிரிச்சிட்டு. .. இவ்வளவு நாள் எத இழந்திருக்கோமோன்னு இப்போ புரியுது. நாங்க கொஞ்ச நேரம் சேர்ந்து spend பண்ண ஆரம்பிச்ச பிறகு முன்னாடி வந்த பிரச்சனைகள் எதுவுமே வரலே. அப்படியே வந்தாலும் பேசி தீத்துக்கறோம். 2 வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.

எல்லாமே உன்னாலே தாண்டா.. '

நான் ஒண்ணுமே சொல்லலே..

இப்போ தான் ஒரு நிம்மதி மனசுலே. காரணமே இல்லாம பிரிய இருந்த ஜோடியை சேர்துட்டோம்னு ஒரு நிம்மதி எனக்கு.

உறவு பலப்பட மனசு விட்டு பேசறது எவ்வளவு முக்கியம்.. இது புரிஞ்சாலே பாதி பிரச்சனை தீந்துடும்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.