மௌனமான நேரம்

 

Monday 24 August 2009

கறுப்பு பூனையை(?) தேடி சுவிட்சர்லாந்து வராதீங்க!!

Posted by மௌனமான நேரம் | Monday 24 August 2009 | Category: |
ஓ!! கறுப்பு பூனை இல்லங்க.....கறுப்பு பணம் !!!


சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது.


இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.


இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டுமே பல லட்சம் கோடி இருக்கும் என்று சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறப்பட்டது.


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள்களுக்குள் எல்லா கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவருவோம் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சூள் உரைத்தனர்.


இத்தனை ஆண்டுகளாகச் சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் கறுப்புப் பணம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் எரிச்சலுடனே அவர்களைப் பார்த்துக் கேட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் முறைகேடாக சேர்த்த பணம் பற்றி விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று கோரின. அதை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதையே முன்னுதாரணமாகக் காட்டி இந்தியாவைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளைத் தருமாறு கேட்போம் என்று அத்வானி உள்ளிட்ட மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் கோஷமிட்டனர்.


தேர்தல் முடிந்து இப்போது மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் கறுப்புப் பணக்காரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் சமீபத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நிருபர்கள் சந்தித்து இது குறித்து கேட்டபோது, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் தொய்வே கிடையாது; தேவைப்படும் வழக்குகளில் விவரங்களைக் கேட்போம் என்று அறிவித்தார்.


சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரங்களைத் தரத்தயார் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்தன. அத்துடன் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கணக்காக இருந்தால் உடனே தரத்தயார் என்றும் கூறின.


ஆனால் தில்லிக்கு வந்துள்ள ஸ்விஸ் வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் நேசனோ, யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு விடலாம் என்ற உரிமையை அரசு அளித்துவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இரட்டை வரி விதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. எனவே சுவிட்சர்லாந்து நாட்டில், சட்டவிரோதமாகப் பணத்தை யாராவது வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் வங்கி நிர்வாகிகளே அவர்களுடைய கணக்கைத் திறந்து காட்டுவார்கள்; அப்படி எதுவும் இல்லாமல் வெறும் தகவல் அறியும் உரிமைக்காக யாராவது வங்கியை அணுகினால் ஒரு தகவலையும் பெற்றுவிட முடியாது என்று ஜேம்ஸ் நேசன் கூறியிருக்கிறார்.


இந்த நிலையில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் கறுப்புப்பணத்தை எப்போது, எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யிடம் நிருபர்கள் கருத்து கேட்க முனைந்தனர். அவர் தனது நார்த் பிளாக் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது வழி மறித்த நிருபர்களிடம், "என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்... உரிய முறையில் இந்த விவகாரம் குறித்து ஸ்விஸ் வங்கியுடன் பேசுவோம். ஒரு தேசத்தின் நலனுக்காக இந்த விவரங்களை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்குத் தருவதுதான் சரியானது..." என்றார்.


இந்த விவரங்களைப் பெறுவது அத்தனை சுலபமானதல்ல. ஒரு போன் செய்து கேட்டதும் ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் விவரங்களைத் தந்துவிட மாட்டார்கள். அதில் இரு நாட்டு உறவுகள் மற்றும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறுக்கிடுவதால், இந்திய அரசுக்கு ஒரேயடியாக தகவல் தரமாட்டேன் என ஸ்விஸ் வங்கியும் மறுத்துவிட முடியாது என்கிறார் நிதித்துறை அதிகாரி ஒருவர்.


இன்னொன்று சூழலுக்கேற்ப நெகிழும் தன்மை கொண்ட சட்ட விதிகளின் கீழ்தான் ஸ்விஸ் வங்கி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்திய அரசு உண்மையாகவே நெருக்கடி தரும்பட்சத்தில் அனைத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் விவரமும் தெரிந்துவிடும், என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



கறுப்பு பூனை பிடி படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!!

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.